ஊழித்தாண்டவம் #RajaChorusQuiz 4/500

சிவராத்திரியை முடித்த கையோடு இன்னொரு பாடல், அழித்தல் தொழிலைச் செய்பவனும் அவனைச் சுற்றி இருப்போரும் கொண்டாடும் பாடல் இது.

தெலுங்கில் மகா, மெகா ஹிட்டடித்தது இந்தப் படம், அப்புறம் தமிழுக்கும் மொழி மாற்றம் செய்து கூடவே ஒரு லொள்ளு குணச்சித்திரத்தை வைத்து மேலதிக காட்சிகளோடு எடுத்த படம், தெலுங்குக்கும் தமிழுக்கும் ஒற்றுமையாக ஒரு விஷயத்தை மட்டும் விட்டுவிட்டார்கள்.
இந்தப் படத்தின் பின்னணி இசையை இன்றும் உச்சுக் கொட்டும் ஆந்திரவாலாக்கள் உண்டு.

ஒரு பாடலின் ரிதத்தையே மீண்டும், மீண்டும் அரைக்கும் இ(ம்)சையமைப்பாளர்கள் காலாகாலமாக இருக்கும் காலத்தில், இந்தப் பாடலைப் பிரித்துப் பார்த்தால் சரணத்திலேயே இன்னொரு பாடல் கிட்டும் அளவுக்கு கோரஸ்குரல்களை வைத்துப் பின்னி எடுத்திருக்கிறார் ராஜா.

அதிகம் க்ளூ கொடுக்கிறேன் என்ற ஏகப்பட்ட புகார் காரணமாகவும், கிசுகிசுப் பிரியர்களை ஏமாற்றவும் எண்ணி இன்று இத்தோடு நிறுத்துகிறேன், பாடலைக் கண்டு பிடித்தால் உச்சுக் கொட்டித் தவிப்பீர்களப்பா.
மகராஜாக்களே, மகாராணிகளே விடையோடு வருக 🙂

மக்களே போட்டி நேரம் நிறைந்தது, இந்தப் புதிரில் வந்த பாட்டு அந்தப்புரம் படம் படத்தில் சங்கர் மகாதேவன், கோபிகா பூர்ணிமா குழுவினரின் குரல்களில் ஒலித்த “தை தக தை துடி கொட்டுது பாரைய்யா”

Advertisements

சிவனே போற்றி RajaChorusQuiz 3/500

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே

ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே

என்ற சிவவாக்கியர் அருளிச்செய்த பாடலை அப்படியே உச்சரித்துக்கொண்டு இன்றைய சிவராத்திரி நன்னாளில் இந்த ஒலித்துணுக்கைக் கேளுங்கள். நான் என்ற அகங்காரம் அகன்று பதியாகிய தெய்வத்தோடு சேரும் நிலையாக
இந்தப் பாடலை முணுமுணுப்பீர்கள்.

போட்டி நிறைந்தது
சரியான விடையாக அமைந்த பாடல் : ஓம் சிவோஹம் (நான் கடவுள்)

படிச்சவங்க பதில் சொல்லுங்கய்யா RajaChorusQuiz 2/500

முதலில் இந்தப் போட்டிக்குப் பெருவாரியான ஆதரவை வழங்கிய பங்காளிகளுக்கு மிக்க நன்றி.

இளையராஜாவின் பாடல்களில் சேர்ந்திசைக் குரல்கள் (chorus) வரும் இன்னொரு பாட்டு இது.

எண்பதுகளின் அதிரடி நாயகன் சொந்தப்படங்கள் எடுத்து தன்னுடைய
மார்க்கெட்டை உயர்த்திவிடுவார். தானே படங்களை இயக்கினாலும் இந்தப் படம் அவரின் இயக்கத்தில் வரவில்லை.
இவரின் குடும்பத் தயாரிப்பில் வந்த படம் தேவதாஸ் இமேஜில் ஒரு கதையை எடுத்திருக்கிறார். இராமாயண நாயகியோடு பாண்டவ நடிகர் நடித்த இந்தப் படத்தின் ஒரு பாடல் இன்றைய புதிரில். பாடலின் இரண்டு இடை இசையை இணைத்துக் கொடுக்கிறேன்.
இதே பாடல் சோக மெட்டில் இளையராஜா பாடும் இன்னொரு பாடலாகவும் இதே படத்தில் இருக்கே.

போட்டி நேரம் நிறைந்தது
சரியான பதில் “பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே” பாடல் இடம் பெற்ற திரைப்படம்: படிச்ச புள்ள
நடிகர்கள்: அர்ஜீன், சீதா

#RajaChorusQuiz1 இளையராஜாவின் பாடல்களில் சேர்ந்திசைக் குரல்கள்

rajaஇன்று முதல் இந்தப் பக்கத்தினூடாக, இசைஞானி இளையராஜா இசையில் வெளியான பாடல்களின் வழியாக ஒரு புதிய போட்டியை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.
ஏற்கனவே றேடியோஸ்பதி வலைப்பதிவின் வழியாக கடந்த ஐந்து வருடங்களாக றேடியோஸ்புதிர் என்ற போட்டியை நடத்தி வந்தாலும் இந்தப் புதிய போட்டியின் வழியாக இசைஞானி இளையராஜாவின் பாடல்களின் இன்னொரு பரிமாணத்தைப் பகிரும் நோக்கில் கொடுக்கவிருக்கிறேன்.

எழுபதுகளின் இறுதியில் ஆரம்பித்த இசைஞானி இளையராஜாவின் தொடர் இசை இயக்கம் இன்று நாற்பது ஆண்டுகளைத் தொடும் வேளை, ராஜாவின் இசையில் மலர்ந்த பல்லாயிரக்கணக்கான திரையிசைப்பாடல்களில் பலவற்றில் பொதிந்திருக்கும் ஆரம்ப மற்றும் இடையிசையில் வாத்தியக்கருவிகளுக்கு நிகராக சேர்ந்து இசைத்த குரல்களின் கூட்டணி எவ்வளவு தூரம் வித்தியாசப்பட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது என்பதற்கான ஒரு தொகுப்பாகவும் இந்தப் பகுதி அமையவிருக்கின்றது.

#RajaChorusQuiz என்ற tag ஐ இந்தப் போட்டிக்காக உபயோகிக்கப் பரிந்துரைத்த சகோதரன் புரட்சிக் கனலுக்கு நன்றி, அத்தோடு இன்னும் பல பரிந்துரைகளை வழங்கிய உங்களுக்கும் நன்றி.

போட்டி விதிமுறைகள்.

1. ஒவ்வொரு நாளும் போட்டிக்கான இசைத்துணுக்கு இந்த வலைப்பக்கம் வழியாகப் பகிரப்படும். எனவே விடைகளையும் நீங்கள் இங்கேயே பகிரவேண்டும்.
2. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலே இந்தப் போட்டியில் இடம்பெறும் பாடல் எது என்ற விடையைப் பகிராமல் உறுதுணை புரிய வேண்டுகிறேன்.
3. பாடலின் முதலடியை நீங்கள் பதிலாகக் கொடுக்க வேண்டும்..
4. பாடல் குறித்த அதிக விளக்கங்களைப் போட்டியில் கொடுக்காது தவிர்க்கப் போகிறேன், எனவே ஏதோவொரு வகையில் மூளைக்கு வேலை செய்து பாடலை முணுமுணுத்தாவது நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.
5. போட்டியில் இடம்பெறும் பாடல் எது என்ற விபரம் மறுநாள் அறிவிக்கப்படும்.

இதோ வெள்ளோட்டமாக ஒரு இசைத் துணுக்கைத் தருகின்றேன், மிகவும் சுலபமான ஜூஜூபி கேள்வி இது
இந்தப் பாடலுக்கான போட்டி நேரம் நிறைந்தது

இந்தப் போட்டியில் வந்த பாட்டு சிவா படத்தில் வந்த “இரு விழியின் வழியே நீயா வந்து போனது” http://www.youtube.com/watch?v=Q-1GbK3sxiE&sns=em